மக்கள் வழங்கிய ஆணையை நிலைநிறுத்த வரவு செலவுத் திட்டம் தவறி விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(21.02.2025) விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அதன் கொள்கை கட்டமைப்பின் 105ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
மாற்றுக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு போன்ற உறுதிமொழிகளைக்
கைவிட்டுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடியை அதிகரித்துள்ளதாகவும் பிரேமதாச
குற்றம் சுமத்தியுள்ளார்.
நடைமுறைகள் அரிதானவை
முதன்மை செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஆகக் கட்டுப்படுத்துதல்
மற்றும் முதன்மை சமநிலையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக்
கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிதிக் கொள்கைகளை அவர்
விமர்சித்துள்ளார்.
உலகளவில் இந்த நடைமுறைகள் அரிதானவை என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசிய பிரேமதாச, அதனை
அடக்குமுறையானது மற்றும் துன்பகரமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள்
பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியம் என்றாலும், முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, பேச்சுவார்த்தை நடத்திய விதிமுறைகளை கடைபிடிப்பதை விட அரசாங்கம்
மிகவும் சாதகமான ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று
அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட
பொதுத்துறை ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வை வழங்குவதில்
அரசாங்கம் தவறிவிட்டது என்று அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிர்வாகத்தின் ஆட்சியை கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவின்
ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசிய சஜித் பிரேமதாச, தொடர்ந்து அரசியல் பழிவாங்கல்கள்
மற்றும் விருப்பப்படி திட்ட ஒதுக்கீடுகள் என்பவற்றை அதற்கு உதாரணங்களாக
குறிப்பிட்டுள்ளார்.