இலங்கையில் (Sri Lanka) சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அரசாங்கத்திடம் போசனைக் கொள்கை திட்டம் ஒன்று இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (04) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை குறைவான மற்றும் வளர்ச்சி குறைவான (கட்டையான) குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி குறைபாடு
இந்த சிக்கலுக்கு பின்னரான ஆய்வுகளின் படி வீடுகளில் நான்கில் ஒரு பங்கு நடுத்தரமான அளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர்
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (உயரம் குறைவு) 19.3 ஆக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 9.2% ஆல் அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின் பிரகாரம் 5- 18 வயதுக்குட்பட்டவர்களில் 37.4% ஆகவும் அல்லது 10-17 வயதுக்குட்பட்டவர்களில்1/3 பங்கினர் வளர்ச்சி குன்றியவர்களாக (கட்டையான) அல்லது அதிக எடை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.
தேசிய போசணைக் கொள்கை திட்டம் ஒன்றும் இல்லை. எனவே பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவையும் வழங்க வேண்டும்.
குழந்தை தலைமுறை
ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு முன்பாக இவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இவை எதுவும் இல்லாமல் ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அனுமதிக்க முடியாது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தை தலைமுறையே சீரழிந்து செல்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.