Courtesy: Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கையை செய்துக் கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.
கண்டி, மாவனல்லையில் இன்று (19.08.2024) நடைபெற்ற அரசியல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச, இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய உடன்படிக்கை மனிதாபிமானத்தை மையமாகக் கொண்டதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடனைத் திருப்பிச் செலுத்தல்
தற்போதைய, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை ஒரு புதிய அரசாங்கம் திருத்த முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது.
எனினும், மனிதாபிமான அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதனை திருத்தம் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் 2033ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முன்மொழிந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை திருப்பிச் செலுத்த உடன்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர் பிரேரணை
பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் இத்தகைய எதிர் பிரேரணையை முன்வைத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சிகள் பல தடவைகள் சந்தித்துள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, தற்போதைய உடன்படிக்கையானது குடிமக்களின் ஆசீர்வாதமில்லாத அரசாங்கமும் ஜனாதிபதியும் இணைந்து செய்துள்ள உடன்படிக்கை என்று, தாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்