அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது, சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.
தெஹியத்தகண்டியவில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் பேரணியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை ஐக்கிய மக்கள் சக்தியே பாதுகாத்ததாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு மற்றும் சலுகைகள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்ற போது அவை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிடைக்கும்.
சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற விரும்புகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
நிவாரணம்
இதற்கு மேலதிகமாக பதவி உயர்வு முறைமைகள், கூட்டுக் கொடுப்பனவுகள், ஊனமுற்ற சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நிவாரணங்கள் என்பனவும் வழங்கப்படும்.
அநியாயமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அந்த தொழிலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.