அருவக்காடு இல்மனைட் சலவைத் தளம், முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் நேரடி தலையீட்டின் காரணமாக சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அருவக்காடு இல்மனைட் சலவைத் தள விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிறுவனம் இந்த சட்டவிரோத நடவடிக்கையை செய்துள்ளது.
முன்னோடி திட்டம்
வில்பத்து தேசிய வனத்தில் எல்லையில் தொல்பொருள் ரீதியாக அறிப்பட்ட குறித்த காணியில் இந்த இல்மனைட் சலவை தளம், அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி செயற்பட்டதாலும், அரசியல் அதிகாரிகள் கூட திட்டங்கள் தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்கும் சூழல் இல்லாததாலும், எந்த பயமும் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் செய்யப்பட்டுள்ளது.
இது தொழில்துறை அமைச்சின் கீழ் உள்ள சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிலம் என்பதால் நாங்கள் இந்த இடத்தை ஆய்வுக்குட்படுத்தினோம்.
மேலும் தற்போது சீமெந்து உற்பத்தி செய்யும் இன்சி சிமென்ட் நிறுவனம், சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுப்பதற்கு முன் உள்ள மண் அடுக்கில் உள்ள இல்மனைட்டைக் கழுவி எடுத்துள்ளனர்.
இந்த இல்மனைட் பதப்படுத்தும் தொழிலுக்காக சீமெந்து கூட்டுத்தாபனத்தின் நிலம் கையகப்படுத்தும்போது, சட்டமா அதிபரின் ஒப்புதல் இல்லாமல், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 50,000 டொலர்களை வழங்குவதன் மூலம் ஒரு முன்னோடி திட்டமாக இது செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.