தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனின்(R. Sampanthan) இழப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை காலத்தின் பேரிழப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிளிநொச்சியில் இன்று(01) காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய இனத்தின் மிகப்பெரும் தலைவராக நீண்ட காலம் தமிழ் இனத்தை வழி நடாத்திய பெருந்தலைவரை தமிழ்த் தேசிய இனம் இழந்துள்ளது.
காலத்தின் பேரிழப்பு
அவர் மூப்பின் காரணமாக இறந்திருந்தாலும் தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் 1960ற்கு பின்பு சிறந்த பணிகளை ஆற்றிய சட்டத்தரணியும் எதிர்க்கட்சி தலைவரும் எமது கட்சியின் தலைவருமான சம்பந்தன் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களைப் பொறுத்த வரை காலத்தின் பேரிழப்பாகும்.
அவருடைய இறப்பு நாளிலே அவருடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் கருத்தில் கொண்டு அவர் விட்டுச் செல்லும் பயணத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து எங்கள் தமிழ் மக்களுக்கான தேசிய அபிலாசைகளை தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான நீண்ட பயணத்தில் எங்களுடைய கரங்களை ஒன்றாக இணைத்து பயணிப்பதே நாங்கள் அவருக்கு செய்யும் பணியாக மாறும்.
அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தில் உதித்த ஒரு மனிதனாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து வடகிழக்கு இணைப்புக்கு மூலகாரணமாக இருந்து பெரும் பாங்காற்றியவர், தேசியத் தலைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைவரே எங்கள் தேசம் இழந்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/nYQ6idi3AAw