தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மறைவையொட்டி சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈழத் தமிழ் மக்களின் முதுபெரும் தலைவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவிடாது போராடியவர்.
தமிழ் மக்கள் இந்த மண்ணில் சகல உரிமைகளையும் பெற்று கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்த திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் சம்பந்தன் தனது 91ஆவது வயதில் காலமாகினார் என்னும் செய்தி தமிழ் மக்களுக்கு கவலை அளிக்கும் செய்தியாகும்.
சர்வதேச சமூகத்துடன் சந்திப்பு
நீண்ட நெடிய ஒரு ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்து ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் ஆயுதப் போராட்ட இயக்கங்களுடனும் கலந்துரையாடி ஒன்றிணைந்து செயற்பட்டவர்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமக்கென ஓர் ஆட்சிமுறையை உருவாக்கி ஒன்றுபட்ட நாட்டிற்குள் அவர்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழவேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டது மாத்திரமல்லாமல், ஒவ்வொரு சர்வதேச சமூகத்துடனான சந்திப்புகளிலும் ராஜதந்திர மட்ட சந்திப்புகளிலும் இதனை வலியுறுத்தி வந்தவர்.
சிங்கள சமூகம் தமிழ் மக்கள்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட பிரிக்கப்பட முடியாத பிரிபடாத நாட்டிற்குள் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இதற்காக நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடி குரல்கொடுத்தவர்.
தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோரின் வழியில் தமிழரசுக்கட்சியின் தலைவராகப் பணிபுரிந்தது மாத்திரமல்லாமல் இலங்கைத் தீவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் குரல்கொடுத்த பெருந்தலைவர்களில் சம்பந்தனும் ஒருவர்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை
சம்பந்தன் தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் பல்வேறு தரப்புகளால் முன்வைக்கப்பட்டாலும் அவர் தனது வரம்பிற்குள் இருந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் போராடியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தின் இறுதி அங்கமாக சம்பந்தன் அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அங்கம் வகித்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றிய காலத்தை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
அன்னாருடன் பழகிய தருணங்களை நெஞ்சில் நிறுத்தி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் குடும்பத்தினர், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.