முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) இறப்பதற்கு முன்னர் அவர் பயன்படுத்திய உத்தியோகப்பூர்வ இல்லம் எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக கடிதம் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தை சம்பந்தனின் மகள், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதி அனுப்பியுள்ளார்.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.
உத்தியோகபூர்வ இல்லம்
2018 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும் இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் வாழும் வாய்ப்பு சம்பந்தனுக்கு கிடைத்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையே அதற்குக் காரணம்.
சம்பந்தன் மரணமடைந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களால் ஒப்படைக்கப்படவில்லை.
செலவுகள்
இந்த நிலையில், குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை சம்பந்தன் தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்த அமைச்சரவைப் பத்திரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லத்தின் தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசே ஏற்றுக்கொள்வதுடன், வீட்டைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் சம்பளமும் அரசே செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.