சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ரணிலுடன் இருந்து விலகியவர்கள் அனைவரையும் தம்முடன் இணையுமாறு ஜனசேத பெரமுனவின் (Janasetha Peramuna) தலைவர் பத்தரமுல்ல சீலரதன தேரர் (Seelarathana Thero) அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனசேத பெரமுன கட்சியின் அலுவலகத்தில் நாடளாவிய ரீதியிலான ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பமிடப்பட்டனர்.
இதன்போது, கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரதன தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணைக்குழு
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLPP)துண்டு துண்டாக உடைந்து கிடக்கிறது.
தேர்தல் ஆணைக்குழுவால் வேட்புமனுக்கள் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு செல்ல இடமில்லை என்றால் மாடுகளின் பின்னோ அல்லது கொள்ளையர்களின் பின்னோ செல்லாது ஜனசெத பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
பொதுஜன பெரமுன மற்றும் ரணிலுடன் (Ranil) இருந்து விலகியவர்கள் அனைவரையும் என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
உர மானியம்
தேர்தலால் நிறுத்தப்பட்ட உர மானியத்தை தேசிய மக்கள் சக்தி (NPP)பெற்றுத்தர வேண்டும் என்று முழக்கமிட்டவர்கள் இப்போது உரம் தரமாட்டோம் என்று கூச்சல் போடுவதில்லை.
குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) பற்றியும் நாம் பேச வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்பு கூறியவற்றையே இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகிறது“ என தெரிவித்தார்.