பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகியமைக்கான உத்யோகப்பூர்வ ஆவணம் எதுவும் இல்லை என அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தெரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் தனி நாடாக உருவாக பாகிஸ்தானிடம் போர் புரிந்து உயிர் துறந்தவர்களை தியாகிகள் எனக்கூறி அவர்களின் வாரிசுகளுக்கு அந்த நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
மாணவர்கள் போராட்டம்
இதற்கு எதிராக சமீபத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பிய நிலையில், மாணவர்கள் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டமையினால் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தனது சகோதரி ரெஹானுவுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனை தொடர்ந்து, பங்களாதேஷின் இராணுவத்தினால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
அத்துடன், அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியமைக்கான கடிதத்தையும் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பியதாக கூறப்பட்டதுடன் மாணவர்களது போராட்டமும் கைவிடப்பட்டது.
இடைக்கால அரசு
இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் தற்போது வங்கதேசத்தில் நிர்வாகம் நடந்து வருகிறது.
ஷேக் ஹசீனா தொடர்பில் கருத்து தெரிவித்த முகமது ஷஹாபுதீன்,
‛‛வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகியமைக்கான அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்கள் என்னிடம் இல்லை.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை சுமார் 10.30 மணியளவில் ஷேக் ஹசீனா வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் நேரில் வரவில்லை. இதுபற்றி இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் முகமது அடில் சவுத்திரியிடம் அதை கவனிக்கச் கூறினேன்.
அவருக்கும் எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே தான் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நான் கேள்விபட்டேன்.
பதவி விலகல் கடிதம்
இராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் வந்தபோது, பிரதமர் பதவியிலிருந்து விலகினாரா என்பதை அறிய முயற்சித்தேன். ஆனால் பதவியிலிருந்து விலகியதாக தகவல்தான் வந்ததே தவிர அதற்கான கடிதம் என்பது வரவில்லை.
அதன்பிறகு அமைச்சரவைச் செயலர் கடிதம் கேட்டு வந்தார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஷேக் ஹசீனாவின் பதவி விலகல் கடிதம் இல்லை என்று கூறினேன்.
எனினும், ஷேக் ஹசீனா வெளிநாடு சென்றதால் சட்ட ஆலோசனைக்கு பிறகு இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.