முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிலிய சவிய கணக்கு தொடர்பாக நடைபெற்று வரும் புதிய விசாரணைகளின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மகிந்த ராஜபக்ச, சமீபத்தில் மல்வத்தே மகாநாயக்கரைச் சந்தித்து, அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான கொள்வனவு தொடர்பிலான முறைகேடுகள்
எனினும் கடந்த காலத்தில் ஊழல் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நாங்கள் எப்படி ஜனாதிபதி அனுரவிடம் அப்படிச் சொல்ல முடியும் என மல்வத்தே மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மகிந்தவின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஷிரந்தியின் சகோதரரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அண்மையில் கைது செய்திருந்தது.
விமான சேவை நிறுவனத்திற்கான விமான கொள்வனவு தொடர்பிலான முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காக நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பாரியளவு முறைகேடுகள் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.