ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு
தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமரர் சம்பந்தனின் மறைவு தொடர்பாக
அனுதாபம் வெளியிட்ட ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன் கூறிய விடயம் அனுதாப அரசியலாகவே பார்க்கப்படுகின்றது என ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (09.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனவாத ஆட்சியாளர்கள்
அவர் மேலும் கூறுகையில்,
“சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க
வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் துரதிஷ்டமாக அவர் மறைந்துவிட்டார்
எனவும் தானும் சம்பந்தனும் ஒன்றாக நாடாளுமன்றம் வந்தது தொடர்பில் ஜனாதிபதி
சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
ஆகவே இந்த வருடம் ஒக்ரோபர் முடிவதற்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும்
சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
அமரர் சம்பந்தன் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட
தீர்வுத் திட்டத்தை அன்றைய இனவாத ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து அத்திட்டத்தை
தீயிட்டு எரித்திருந்தார்.
அந்த தீர்வுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அல்லது சேர்க்கப்படவேண்டிய
விடயங்கள் அல்லது தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் மேலும் வலுவாக இணைக்கப்பட
வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
அதை விவாதித்திருக்க வேண்டும். அதனால் அந்த தீர்வுத்திட்டம் ஆராயாமலேயே தீயுடன் சங்கமமானது. அந்த
வாய்ப்பையும் சம்பந்தன் பயன்படுத்தியிருக்கவில்லை.
பின்னர் நல்லாட்சி அரசை கொண்டுவந்தவர்கள் நாங்கள் என மார்பு தட்டி
புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கூட எதிர்க்கட்சி தலைவராகவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாகவும் வலம்வந்த சமயத்தில் கூட
மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து எமது அரசியலுரிமை
பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமல் அரசுக்கு முண்டுகொடுத்து கொழும்பில் அரச
மரியாதைகளுடன் இராயபோக வாழ்வையே தொடர்ந்திருந்தனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.