ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள நான்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி பெற்ற தேசியப்பட்டியல் எம்.பி. பதவிகளில் ஐந்து பதவிகளில் ஒரு பதவியே இதுவரை நிரப்பப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல்
மீதமுள்ள நான்கு பதவிகளுக்கு டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இமிடியஸ் பாக்கீர் மார்க்கர், சுஜீவ சேனசிங்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன“ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
வேட்புமனுவில் அவரது தந்தை கையெழுத்திட்டாலும், இறுதிப் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கண்டி மாவட்டத்தில் இருந்து 21 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாத பின்னணியில் தான் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.