ஊழலை இல்லாதொழிப்பதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள்
சக்தி, உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க
முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள்
முன்மொழியும் மேயர் வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு
அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கைச் சுமை சடுதியாக உயர்வடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி தேர்தல்
பிரச்சார மேடைகளில் வாழ்க்கைச் செலவுகள் பற்றி தீவிரமாகப் பேசியது. ஆட்சிக்கு
வந்தவுடன் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதாகப் குறிப்பிட்டது.
ஆனால்,
இதுவரையில் வாழ்க்கைச் செலவுகள் குறைக்கப்படவில்லை.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எவ்வித திட்டங்களையும்
அரசு முன்வைக்கவில்லை. நிறைவடைந்துள்ள 6 மாத காலத்தில் பொருளாதார மேம்பாடு
மற்றும் விருத்திக்கான நடைமுறைக்குச் சாத்தியமான புதிய கருத்திட்டங்கள் ஏதும்
ஆரம்பிக்கப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் எவ்வாறு நடுத்தர மக்களின்
வாழ்க்கைத் தரம் மேம்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசு பொய் மற்றும் வெறுப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு
வந்தது. அரசின் உண்மைத்தன்மையை மக்கள் ஆறு மாத காலத்துக்குள் விளங்கிக்
கொண்டார்கள்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி
இதனால் அரசு 23 இலட்சம் வாக்குகளை இழந்தது. இதனால்தான் அரசு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெறவில்லை.
கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சி அமைப்பது என்பது இழுபறி நிலையில் உள்ளது.
ஊழலை இல்லாதொழிப்பதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு
உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க
முயற்சிக்கின்றது.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய
மக்கள் சக்தி ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரியது.
ஆனால், ஆட்சி
அமைப்பதற்கான சிறந்த திட்டங்களை முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்
ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் முன்மொழியும் மேயர் வேட்பாளருக்கு நாங்கள்
ஆதரவு வழங்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.