ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
ஒருவர் மாத்திரம் தெரிவு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Madduma Bandara) பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்டது. மிகுதி தேசியப் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு இதுவரையில் பெயர் குறிப்பிடாமல் இருப்பது குறித்து பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணி என்ற அடிப்படையில் பல இணக்கப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கியமான நபர்களும் உள்ளனர். அத்துடன் மேலும் சிலர் தேசிய பட்டியலுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இவ்விடயங்கள் அனைத்தையும் ஆராய வேண்டும்.
இவ்வாறான பின்னணியில் தேசிய பட்டியல் விவகாரத்தில் உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளது. எனவே தேசிய பட்டியல் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளோம்.
கட்சியை மறுசீரமைக்க வேண்டும்
ஆகவே வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். இல்லையேல் மக்கள் விமர்சிப்பார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் பின்னடைவை எதிர்க்கொள்ள நேரிட்டது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.
மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இணக்கமாக செயற்பட வேண்டும், மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி புதிய மாற்றத்தை நாட்டு மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். சிறந்த மாற்றத்தை செயற்படுத்த கூடிய திறமையானவர்கள் கட்சியில் இருக்க வேண்டும். மறுசீரமைப்புடன் புதிய முகத்துடன் செயற்படாவிடின் அரசாங்கத்துடன் போட்டியிடவும் முடியாது, மக்களின் மனங்களை வெல்லவும் முடியாது” என தெரிவித்தார்.