2024 பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஊடக செயலாளர் ஏரானந்த ஹெட்டியாராச்சி (Eranda Hettiarachchi) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அறிவுறுத்தல்
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும (Ranjith Madduma Bandara) பண்டாரவினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான தினால் பிலிப், நளின் திசாநாயக்க மற்றும் எஸ்.டி.ஜயநாத ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக் குழுவின் அறிக்கையை உடனடியாக கட்சியின் வேட்புமனு குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.