பலஸ்தீன (Palestine) பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் (Israel) ஹமாஸ் (Hamas) போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக தோல் நோய் பரவுவதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர் பல்வேறு தோல் வியாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா போர்
இந்தநிலையில், சிரங்கு, சின்னம்மை, பேன், கொப்புளங்கள் ஏற்படும் ஒருவகை தோல் வியாதி மற்றும் பலவீனப்படுத்தும் சொறி வரை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
வெறும் தரையில் மண் மீது படுத்துறங்கும் நிலை இருப்பதால், இதுபோன்ற தோல் வியாதிகள் ஏற்படுவதாக பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், காஸா போர் தொடங்கிய பின்னர் சிரங்கு மற்றும் பேன் காரணமாக 96,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோல் நோய்
சின்னம்மையால் 9,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் தடிப்புகளால் 60,130 பேரும் கொப்புளங்களால் 10,038 பேரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கரையோர பலஸ்தீன பிரதேசத்தில் சிரங்கு மற்றும் சின்னம்மை நோய் வேகமாக பரவுகிறது என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கிறார்.
முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் சிறார்கள் தற்போது தோல் வியாதிகளால் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலை தரும் விடயமாக உள்ளது என மருத்துவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.