இலங்கையின் பொதுத் தேர்தலில் 738,659 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள்
குறித்த விண்ணப்பங்களில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் படி, 738,659 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு
அதன்படி, தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.