Courtesy: நிராஜ் டேவிட்
தமிழ் மக்களின் தேசிய மலராக கருதப்படும் கார்த்திகை பூவினை காலணிகளில் இட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, பிரித்தானியா (UK) வாழ் இலங்கைத்தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் பங்குபற்றியவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை தேசிய கொடியிலான பாதணிகளை இலங்கை உயர்தானிகர் அதிகாரிகளின் முன்பாக காண்பித்து கவனயீர்ப்பினையும் மேற்கொண்டனர்.
காலணிகளில் கார்த்திகை பூ
அண்மையில் இலங்கையிலுள்ள ( Sri Lanka) பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குறித்த காலணிகள் கொழும்பு (Colombo) – வெள்ளவத்தையிலுள்ள காட்சியறையிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை பூவை அவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் காலணியில் பயன்படுத்தியமை வடிவமைப்பில் வேண்டுமென்றே உள்வாங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்நிலையிலேயே பிரித்தானியாவில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.