எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான (Local Government Election) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரசார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் (Anuradhapura) இன்று (25) ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நிலவும் பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு பிரசாரத்தைத் தொடங்குவது பொருத்தமானதல்ல என்று கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாகர காரியவசம் தெரிவிப்பு
கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த மாதம் 2ஆம் திகதி கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளைத் தொடங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.