வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக,சிறிலங்கா இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் கடவுச்சீட்டுகளையும் படைப்பிரிவின் காவலில் வைத்திருக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
இராணுவ வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை படைப்பிரிவு வைத்திருப்பது, குற்றத்தில் ஈடுபடும் வீரர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கிறது என்று கமகே கூறினார்.
மூன்றாம் தரப்பினரின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து மிகக் குறைவு
பல இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுகள் காணாமல் போயுள்ளதாகவும்,இந்த முறைமூலம் அத்தகைய கடவுச்சீட்டுகள் மூன்றாம் தரப்பினரின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து மிகக் குறைவு என்றும் வருண கமகே மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயிற்சிக்காகவும், அமைதி காக்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் பல வீரர்கள் திடீரென அனுப்பப்படும்போது ஏற்படும் சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளைத் தடுக்க இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடவுச்சீட்டுக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது படைப்பிரிவுத் தளபதிகளின் பொறுப்பாகும் என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் கடவுசீட்டை பெறலாம்
மேலும், படையினர் தங்கள் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் எந்த நேரத்திலும் கடவுசீட்டை பெறலாம் என்றும் பிரிகேடியர் வருண கமகே கூறினார்.