தென் கொரியாவில்(south korea) கடந்த டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் பறவை மோதியே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஜெஜு ஏர்(Jeju Air) விமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, இரண்டு என்ஜின்களிலும் இருந்த இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் பைக்கால் டீல் என்ற இடம்பெயர்ந்த வாத்து வகையைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பறவை மோதியமையினாலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமான விபத்து
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது விமானம் விபத்துக்குள்ளானது.
சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளியில் விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் விமானத்தில் தீப்பிடித்தது.
இதேவேளை, இந்த விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு விமான பணியாளர்கள் மட்டுமே உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.