வந்துவிட்டது தேர்தல், வழங்கப்படுகிறது வாக்குறுதி என இலங்கையின் தற்கால அரசியல் போக்கு மாறியுள்ளது.
இதற்கு காரணம் இம்மாதம் 22 ஆம் திகதி இலங்கையின் அரியாசனத்தில் அமரப்போகும் அந்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியிடலின் ஒரு அங்கம். அதுவே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்.
இவ்வளவு காலமும் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த திட்டங்களை மேடையிலேயே அறிவிப்போம், அதன் பின்னரே செயற்படுத்துவோம் என எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் தலைமைகளுக்கு அந்த காலம் வந்துவிட்டது.
அவை அனைத்தும் நடைமுறையாகின்றதா என செப்டம்பர் 22 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் அடுத்த 5 வருட ஆட்சி முடிவிலே பதில் கூற முடியும்.
பெரும்பான்மை அரசியல் தலைமை
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குப்பலம் என்பது பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கு ஒரு சிறந்த துருப்புச்சீட்டு.
அதற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள அவர்கள் கொண்டுள்ள நகர்வுகள் வித்தியாசமாகவும் அமைகின்றது.
ஆனால் இலங்கையின் மிக முக்கிய சிறுபான்மையின கட்சியான தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தும் அது இறுதி முடிவா? என சில கேள்விகளும் எழுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தார்.
ஆனால் அவர் சார்ந்த ஒரு சில தலைமைகளை தவிர முக்கிய கட்சி பிரதிநிதிகள் ஒருவரும் சுமந்திரனின் தீர்மானமே தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எனவும், சுமந்திரனின் கருத்துக்கே ஆதரவு என்றும் வெளிப்படையான கருத்தை வெளியிடவில்லை.
உட்கட்சி மோதல்கள்
உட்கட்சி மோதல்கள் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தாலும், இலங்கையின் அரசியல் போக்கை மாற்றக்கூடிய ஜனாதிபதி தேர்தலிலும் தொடருவது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிக்கும் என விமர்சனங்களும் எழுந்து விட்டன.
இங்கு சுமந்திரனின் ஆதரவு நிலைக்கு பின்னரான அரசியல் கருத்துக்கள் ஒருநிலை உடையதா? என்றும் கேள்வி எழுகிறது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பிரதான வேட்பாளர்களுள் ஒருவராக மாறியுள்ளமை ஏனைய இரு பிரதான வேட்பாளர்களான சஜித் மற்றும் ரணிலுக்கு சவாலை எழுப்பியுள்ள செயலாகும்.
பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி உருவெடுத்துள்ளமையானது அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களை தோற்றுவிக்கும் என அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் கருத்துக் கணிப்புகளில் வெளியாகிறது.
இதில் சஜித்தின் இலக்கு அநுர என கூறப்பட்டாலும், தற்போதைய நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரப்புரைகள் வித்தியாசமான நகர்வை கொண்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் சஜித்துக்கு ஆதரவை அறிவித்த சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தமை மாறுபட்ட நிலையை எடுத்துக்காட்டுகிறது.
இது முன்னெப்போதும் இல்லாத அரசியலின் போக்கு.
அரசியல் தலைமை
எந்த ஒரு அரசியல் தலைமைகளும் தனக்கு ஏற்ற ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்தவுடன் அவர்களுக்கே சாதகமான பதிலை வழங்குவதும், ஏனையவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதும் இயல்பானது.
ஆனால், சுமந்திரனோ சஜித்தை ஆதரித்த பின்னரும் அநுரவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே சுமந்திரனையும், சாணக்கியனையும் சுட்டிக்காட்டி ஒரு கருத்தை முன்வைத்த போதும் அதற்கும் அவர் எந்த எதிர்க்கருத்தையும் வழங்கவில்லை.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,
” எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்தவித கருத்தும் தெரிவிக்காது செல்ல பார்த்தனர்.
என்றாலும் அவரது நாடாளுமன்ற இன்றைய உரையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது போல் சொல்லாமல் சொன்னார் என்றே நினைக்கிறேன்.
இதன்போது இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் இருந்து எழுந்து செல்ல முற்பட்ட நிலையில் அவரை சபையில் அமருமாரும் கேட்டுக்கொண்டேன்.
சாணக்கியனின் உரை
சாணக்கியனின் உரையை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கேட்டேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதை வார்த்தையால் சொல்லாவிடினும், அவரது மனதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாடு இருப்பதை அவதானித்தேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை புதன்கிழமை சந்தித்தேன்.
பலமான அரச தலைவரை தெரிவு செய்வதை தடுப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்காக பெருமளவிலான நிதி செலவழிக்கப்படுகிறது. ஆகவே மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்க வேண்டும்.” என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சாணக்கியன், எனது உரையை செவிமெடுத்தவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்கும் நீங்கள் மாறுப்பட்ட பொருட்கோடல் வழங்க வேண்டாம் என்றார்.
தமிழ் பொது கட்டமைப்பு தரப்பின் வேட்பாளர் தமிழ் தேசியத்தை காக்க வேண்டும் என்கின்றார். சுமந்திரனோ சஜித்தை ஆதரிக்கின்றோம் என்கிறார். பின் அநுரவை வாழ்த்துகின்றார்.
ரணிலின் ஆதரவாளர்கள் எமக்கே தமிழ் கட்சிகளின் ஆதரவென்கின்றனர்.
இதனடிப்படையிலான கருத்துக்களை ஆராய்ந்த சமூகவியலாளர்கள் குழம்பிப் போயுள்ள தமிழர் தரப்புக்கு தீர்வென்பது தொடர்ந்தும் சொல்லாடல்களாகவே மாறுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.