சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இலங்கையிடம்
கோரியதாக கூறப்படும் கூற்று தொடர்பில் இலங்கை அரசாங்கம்
தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் இறையாண்மை உள்ளது. எந்த நாடும் அதனை
சமரசம் செய்யமுடியாது என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக்குறைப்பு தொடர்பான
விவாதம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி
அண்மையில் இது தொடர்பில் ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றபோது பல்வேறு
விடயங்கள் ஆராயப்பட்;டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட சந்திப்புக்களின் அடிப்படையில் இலங்கை தற்போது
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை வரிகளை 30 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது.
எனினும் அதனை மேலும் குறைப்பதற்காக, அமெரிக்க நலன்களுக்கு இலங்கையில்
இடமளிக்கவேண்டியுள்ளது.
சுங்க வரி
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இலங்கையும் சில
சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரிகளை நீக்குதல், இலங்கைக்கு
இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து
இதுவரை ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

