பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthran) தெரிவித்துள்ளார்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி கூட்டம் வெள்ளவத்தை (Wellawatte) தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாதத்தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், அச்சட்டம் நீண்டகாலத்துக்கு முன்னரே நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.
அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.