இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி கடற்றொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாடு, நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்பி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள்.
குறித்த நிகழ்வில் இலங்கையிலிருந்து சென்ற சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்பி எடுத்தமை சமூக ஊடகங்களில் வெளியாகியது.
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் பல வருடங்களாக பேசுபொருளாக இருக்கின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு தமிழக முதல்வரிடம் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கலாம்,
ஆனால் அவர்கள் அவ்வாறு பேசியதாக தெரியவில்லை.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வருடன் கடற்றொழில் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தானது வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக நான் கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் தமிழக முதல்வரின் அருகில் அமர்ந்திருக்கும் போது இந்த விவகாரம் தொடர்பில் பேசி இருக்கலாம்.
அல்லது குறித்த நிகழ்வு முடிவடைந்த பின் தமிழக ஊடகங்களுக்கு இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை தொடர்பில் தெரியப்படுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
நான் கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டுகின்ற பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைத்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக தமிழக தலைவர்களுடன் பேசினேன்.
அரசியல் வரலாறு
நேரில் பேசுவதற்கு நேரம் தருவதாக கூறினார்கள் துரதிஷ்டம் அதிகாரம் என்னிடம் இல்லை.
நான் தற்போது அதிகாரத்திலிருந்து குறித்த நிகழ்வுக்கு தமிழ்நாடு சென்று இருந்தால் தமிழக முதலமைச்சருடன் பேசி இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைப்பது தொடர்பில் முடிவு எடுத்திருப்பேன். இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக பல விடயங்களை சந்தர்ப்பம் பார்த்து பலவற்றை சாதித்திருக்கிறேன்.
உதாரணமாக கூற வேண்டுமானால் அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பேசி சம்மதத்தை பெற்றேன்.
ஒருவேளை அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு நேரம் கேட்டிருந்தால் ஒரு வேளை அது நடைபெறாமல் போயிருக்கும்.
இது போன்ற பல உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும் இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றதும் அவர்களின் சுயலாப அரசியலுக்காக. போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதனை தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்தவில்லை.
ஆகவே கடற்றொழில் செய்யும் மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.