தற்போது காணப்படும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவான டெண்டர் செயல்முறை மூலம் 500,000 கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இன்று (23) இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறிப்பிட்டு, தற்போதைய முறையின் கீழ் புதிய கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான காலக்கெடுவை தொடர்பில் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
ஒரே நாளில் கடவுச்சீட்டு
இதன்படி, இன்று (ஜனவரி 23) யாராவது நிகழ்நிலையில் முன்பதிவு செய்தால் கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஆரம்ப திகதி ஜூன் 27 ஆகும்.இது சுமார் ஐந்து மாத காத்திருப்பு நேரத்தை பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டார்.
எனினும், அவசரகால நிகழ்வுகளுக்கு, ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அங்கீகரிக்க குடிவரவுத் துறைக்குள் ஒரு பிரத்யேக குழு நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த அமைப்பு வழக்கமான சேவைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் அதே வேளையில் அவசரநிலைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.