முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடக சந்திப்பொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள்
இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஊடக சந்திப்பானது இன்றைய தினம்(10.09.2024) இடம்பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி
வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை
மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான
முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின்
முக்கியஸ்தர்கள் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக
கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் தோற்போர் என்று தெரிந்து ரணில்
விக்ரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ
எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்துள்ளனர்.
இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில்
செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித்
பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித்
பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை
பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.