காவல்துறை விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் சிறீலங்கா பொதுஜன பெரமுனவைச் (SLPP) சேர்ந்தவர்கள் என அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ( Nalinda Jayatissa) குறித்த குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று (3.12.2024) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள்
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இனவாதம் மற்றும் மதவாத அடிப்படையிலான அரசியலை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள்
இதேவேளை, அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) அறிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defense) மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்களை நேற்று (3.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.