அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார் என்று ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாக்காளர்கள் மாறப் போவதில்லை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்திருந்தாலும் வாக்காளர்கள் மாறப் போவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
வரவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் தனி நபரை பார்த்தன்றி வேலைத்திட்டத்தை பார்த்தே செயற்படுவார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
நமது நாட்டு மக்கள் செய்நன்றி மறக்காத நன்கு சிந்தித்து பணியாற்றுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கடந்த நெருக்கடியின் போது, மக்களிடம் பணம் இருந்தது.ஆனால் வாங்குவதற்கு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது அவ்வாறான நிலை இல்லை.
எனினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம்.
மேலும் கட்சி நிறமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மக்களும் தீர்மானித்துள்ளனர்.”என கூறியுள்ளார்.