நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படும் சிங்கப்பூர் மாதிரியை
இலங்கை ஏற்றுக்கொள்ளவும், அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றவும் சிறிது
நேரம் எடுக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி, அமைச்சர் பதவிகள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி
குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த கருத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் தீர்மானம்
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான தனிநபர்
தீர்மானத்தை இன்று(7) மன்றில் முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,
இலங்கை சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற சிங்கப்பூர் அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் அதிக சம்பளம் வழங்குகிறது.
மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவும் அதே மாதிரியைப் பின்பற்றுகின்றன.
எனவே இலங்கையும் அதையே பின்பற்ற வேண்டும்.
அரசியல் கலாசாரம்
இந்தத் தலைமுறையில் இலங்கை அதைச்
செய்ய வேண்டும். அர்ப்பணிப்பின் மூலம் அதனை செய்ய முடியும் என்று ரவி
கருணாநாயக்க(Ravi Karunanayake) குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த பிரேரணைக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை
சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும்
என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தற்போதைய பணியாக இருப்பதால், 12 அல்லது 13வது
நாடாளுமன்றத்தில் மட்டுமே, ரவி கருணாநாயக்கவின் கோரிக்கைகளை பரிசீலிக்க
முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.