சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines), வாடிக்கையாளர் ஆதரவை மேம்படுத்தவும், பயணிகள் விமான நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றவும் “யானா” (Yaana) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளரை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP), தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி “யானா” பல்வேறு வகையான பயணிகள் விசாரணைகளை திறம்பட மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாற்று பயண தேர்வு
விசேடமாக விமான இடையூறுகளின் போது பயணிகள் மாற்று பயண தேர்வுகளை விரைவாகக் கண்டறிய உதவும் வகையில் இந்த யானா செயற்கை நுண்ணறிவின் திறன்கள் மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், “யானா” மேம்பட்ட மீட்டெடுப்பு திறன்களுடன் கூடிய GPT-4 தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு ஜெனரேட்டிவ் AI மெய்நிகர் உதவியாளரைக் கொண்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி சாமர பெரேரா தெரிவித்துள்ளார்.
விசாரணைகள்
அத்தோடு, “யானா” அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 12,000 விசாரணைகளை தன்னியக்கமாக கையாண்டுள்ளதாகவும் அவற்றில் 88% ஐத் தீர்த்துள்ளதாகவும் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோக பிரிவுத் தலைவரான திமுத்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், www.srilankan.com ஐப் பார்வையிடுவதன் மூலம் கோட்ஜென் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட யானாவின் அனுபவத்தை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும்.