வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு தற்போது சலுகைகளை வழங்குவது என்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அல்லது தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்கின்ற நிலையில் அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவது என்பது ஆடு நனைகின்றது என்பதற்காக ஓநாய் கவலைப்பட்ட கதைதான்.
தங்க நகைக்கான வட்டி வீதங்கள் அதிகம்
உண்மையைச் சொல்லப் போனால் கோவிட் 19 மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த காலகட்டத்தில், பெரும்பாலும் மத்தியதர வகுப்பு மற்றும் அதற்கு கீழுள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிப்புக்களைச் சந்தித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், தங்களிடம் இருந்த தங்க நகைகளை வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்களில் அடகு வைத்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
தங்களிடம் இருந்த மிக சொற்பளவிலான தங்கத்தை அடகு வைத்து வாழ்க்கையை கொண்டுச் சென்றவர்கள் மிக அதிகம்.
அந்தக் காலத்தில் தங்க நகைகளுக்கான வட்டி வீதங்களும் மிக அதிகமாக இருந்தன. தற்போது அந்த தங்க நகைகளுக்கான வட்டி வீதங்கள் ஓரளவு குறைந்துள்ளது. ஆனாலும் கூட நகைகளை அடகு வைத்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
அத்தோடு, அவற்றை மீளத் திருப்புவதில் இப்போது வரை மிகப்பெரிய சிக்கல் நிலைகளை அந்த மக்கள் எதிர்கொண்டுள்ளனர் என்பதும் உண்மை.
ஆனால், இந்த மக்கள் மீது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள கரிசனை உண்மையான மனிதாபிமான ரீதியில் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.
ஏனென்றால், மக்கள் மீது திடீரென்று பரிவும், பாசமும், பற்றும், அக்கறையும் எழுந்திருப்பதானது சற்று எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது.
சலுகையின் பின்னணியில் அரசியல் காரணம்
கடந்த இரண்டு வருடங்களாக இந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல், வறுமைக் கோடு என்பது கிட்டத்தட்ட 7.8 சதவீதமாக இருந்த போதும், அதைவிட மும்மடங்காக அதிகரித்த போதும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தைத் தவிர வேறு எந்த பெரிய உதவிகளையும் அரசாங்கம் வழங்கியதாக தெரியவில்லை.
அந்த நகைகளை மீட்பதற்குரிய வாய்ப்புக்களை, அல்லது அதற்குரிய கரிசனைகளை அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்தியிருக்க வேண்டிய தேவையும் அந்த காலத்தில் இல்லை.
மத்திய தரம் மற்றும் அதற்கு கீழானவர்கள் தான் இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் என்கையில், இவ்வாறானவர்களுக்கு இது போன்ற சலுகைகளை வழங்கினால், அல்லது சலுகைகளை வழங்குவோம் என்று வாக்குறுதிகளை வழங்கினால் அது எதிர்வரும் தேர்தலுக்கான தயார்ப்படுத்தலாகவே பார்க்கமுடிகின்றது.
இப்போது சொல்லப்படும், அறிவிக்கப்படும் சலுகைகள் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தால் அதை பொதுமக்களின் மீதான உண்மையான கரிசனையாக பார்க்கலாம்.
ஆனால் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு சலுகையை அறிவிப்பதென்பது தேர்தலுக்கான தயார்படுத்தலாகவே தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video