ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் சிறீதரனுக்கும் இடையில் இன்றைய தினம் (17) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக் கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தும் கோரப்பட்டது.
13ஆவது திருத்தச் சட்டம்
இதனையடுத்து, உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து ஒஸ்லோவில் இணங்கிக் கொண்ட இறுதி விடயம் என்ற அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, சுவிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது தமது குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதி ஒன்றை, தமிழர் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

