பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துங்வா மாகாணத்தின் உள்ள இராணுவத் தளமொன்றின் மீது நடத்தப்பட்ட இரு தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலியானதுடன், 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ளவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபானுடன் (Taliban) தொடர்புடைய குழுவொன்று பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட தாக்குதல்
தாக்குதலுக்கு பின்னர் குறித்த இராணுவ தளத்துக்குள் நுழைய முயன்ற ஐந்து முதல் ஆறு தாக்குதல் தாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூரைகளும் சுவர்களும் இடிந்துவிழுந்ததன் காரணமாகவே அதிகளவானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இதுவரை 42 பேரை மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாவும் வைத்தியசாலை தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன் இரங்கலையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.