தமிழ் மக்கள் தொடர்பான சர்வதேச அபிப்பிராயத்தை நீர்த்துப் போகச் செய்ததில்
சுமந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு என அரசியல் ஆயவாளரும், சட்டத்தரணியும்,
சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வருகை, மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பு
தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் தெரிவித்ததாவது,
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை
”இலங்கை அரசின் கழுத்தில் தற்போது இரண்டு கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இக்கத்திகள் எப்போதும் கழுத்தில் பாயலாம். “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலை
தான் அரசிற்கு அமெரிக்க வரிவிதிப்பு.

ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை
தொடர்பான நிபந்தனைகளுமே அந்தக் கத்திகள். இரண்டு கத்திகளையும் சமாழிப்பது
என்பது இலகுவான ஒன்றல்ல.
தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அதற்கு இடம்
கொடுக்காது. முறைமை மாற்றம் பல்வேறு தளங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் போதே இது
சாத்தியமாகும்
அமெரிக்காவின் வரிவிதிப்பை அமெரிக்கா உலகின் மீது தொடுத்த ஒரு வர்த்தகப்
போர் என கூறலாம்.
இது நடைமுறை உலக ஒழுங்கைக் குழப்புகின்ற ஒன்றாக இருப்பதனால்
அனைத்து நாடுகளுமே பாதிப்பை எதிர்நோக்குகின்றன. பொருளாதார பலமுள்ள இந்தியா,
சீனா போன்ற நாடுகளே வரிவிதிப்பினால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாழிக்க
முடியாமல் தடுமாறுகின்றன.
வரி விதிப்பு
பொருளாதார ரீதியாக பலவீனமுற்றிருக்கின்ற இலங்கை
போன்ற நாடுகளுக்கு தடுமாற்றத்திற்கே இடமில்லை. முழுமையாக விழுந்து விடுவதற்கே
வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்க வரி விதிப்புடன் உலக பங்கு சந்தைகள் அனைத்து வீழ்ச்சி கண்டன.
உதாரணமாக ஜப்பான் 225.90 வீதவீழ்ச்சியையும், ஜேர்மனி 9.4 வீத வீழ்ச்சியையும்,
ஹொங்கொங் 13.2 வீத வீழ்ச்சியையும் பதிவு செய்தன. உலக முதலீட்டாளர்களின்
நம்பிக்கைகள் பாதிப்படைந்தது.
செயலிழந்த வர்த்தக சூழல் உருவாகியது.
சீனா, மெக்சிக்கோ , இந்தியா போன்ற
நாடுகள் சுங்கத் தாக்கத்திற்கு உள்ளாகின. நாடுகளின் நாணயங்கள் டொலருடன்
ஒப்பிடுகையில் தமது மதிப்பை இழந்தன.
அமெரிக்காவிற்க்கும் சீனாவிற்கும் இடையே
வரி விதிப்புப் போரும் இடம்பெற்றது. இந்தப் போரின் உச்ச நிலையில்
விண்வெளித்துறை உற்பத்தியாளர்களினாலும், இராணுவ ஒப்பந்தக்காரர்களினாலும்,
பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளடங்கலாக குறிப்பிட்ட பொருட்களின்
ஏற்றுமதிகளுக்கு தடைகளை சீனா விதித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சின் செய்தி
தொடர்பாளர் “அமெரிக்க வரிவிதிப்புக்கு எதிராக இறுதி வரை போராடுவோம்”
எனக்குறிப்பிட்டார். இந்த வரி விதிப்பினால் உலகமயமாக்கல் தோல்வியடைந்து
விட்டதாகவும் அந்த சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் பிரித்தானிய பிரதமர்
ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
“வர்த்தகப் போர்கள் தான் பதில் என நாம் நம்பவில்லை வேறு பாதை இருக்கின்றது
என்பதை காட்ட இது ஒரு வாய்ப்பு” என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை மீது அமெரிக்கா 44 வீத வரியை விதித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதிகளில்
முதல் நிலையில் உள்ள நாடு அமெரிக்கா தான்.
அமெரிக்கா கீழிறங்கி வரலாம்
ஏறத்தாழ 25 வீத ஏற்றுமதி
அமெரிக்காவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றது. தைத்த ஆடைகள் ஏற்றுமதியே முக்கிய
இடத்தை பெறுகின்றது. இந்த வரி விதிப்பினால் அமெரிக்க நிறுவனங்கள் இலங்கை
உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு தயக்கத்தையே காட்டும்.

அவர்கள் தயக்கத்தைக்
காட்டினால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும். இது உள்நாட்டில் ஊழியர்
குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நெருக்கடிகளை உருவாக்கும். தற்போது 90
நாட்களுக்கு வரிவிதிப்பை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தக் கால
அவகாசம் கழிந்த பின்னர் மீண்டும் அது வரி விதிப்பை மேற்கொள்ளலாம்.
இலங்கை இது
விடயத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ஒரு தூதுக் குழுவை
அமெரிக்காவுக்கு அனுப்பிருந்தது அங்கு அவர்கள் அதிகாரிகளுடன் பேசியபோதும்
நம்பிக்கைக்குரிய உறுதிமொழிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
சிலவேளை
அமெரிக்கா வரி விதிப்பின் அளவை சற்றுக் குறைக்கலாம், அவ்வாறு குறைத்தாலும்
இலங்கை பாதிப்பையே எதிர்நோக்கும். வரிவிதிப்பை முழுமையாக அமெரிக்கா
நிறுத்திவிடும் என சொல்வதற்கில்லை. மாற்றுத் தெரிவுகளும் இலங்கையிடம் தற்போது
இல்லை.
ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டி ஒருங்கிணைந்த குரலை இதற்கு எதிராக
கொண்டு செல்ல முயற்சித்தாலும் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா இறங்கி வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால்
பூகோள அரசியல் நலன்களைப் பெறுவதற்காக சிலவேளை இறங்கி வரலாம். இலங்கைத் தீவு
பூகோள ரீதியாக கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த தீவாக இருப்பதனால் சீனாவைப்
பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்கா சற்று கீழிறங்கி வரலாம்.
அமெரிக்கா தனது உலக
ரீதியான எதிரியாக இன்று சீனாவையே பிரதானமாக பார்க்கின்றது.
பூகோள அரசியல் என வருகின்ற போது தமிழ்த் தரப்பிற்க்கும் அங்கு கௌரவமான
இடமுண்டு.
தமிழ் அரசியல் கட்சிகள் அதனைப் பயன்படுத்தவில்லை என்பது வேறு கதை.
தமிழ்த்தேசிய சக்திகள் தமிழ் மக்களின் நலன்களுக்காக இதனைப் பயன்படுத்துவது
பற்றி முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்” என தெரிவித்துள்ளார்.

