ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார் (Suppaiya Ananthakumar) அந்த கட்சியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe), கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து விலகுவது குறித்து சுப்பையா ஆனந்தகுமார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியாகத் தெரிவு
“2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த பின்னர் கட்சியை விட்டு பலரும் வெளியேறிய நிலையில் கட்சியின் வளர்ச்சிக்காகக் கடினமான காலகட்டத்திலும் களத்தில் இறங்கி செயற்பட்டிருந்தோம்.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் எவ்வித கொடுப்பனவுமின்றி பணிகளை முன்னெடுத்து வந்தோம்.
அரச வாகனங்களைக்கூட பயன்படுத்தியது கிடையாது. அரச வளங்களையும் பெற்றது கிடையாது. எனினும், கட்சியில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் பயணத்தைத் தொடரப்போவதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.