ஒரு செயற்கைக்கோள் எவ்வளவு அதிக வருமானத்தை ஈட்டியிருந்தால், ராஜபக்சக்கள் கடந்த 13 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருப்பார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, அவரது மகன் ரோஹித ராஜபக்சவின் பங்குபற்றுதலுடன் சுப்ரீம்சட் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய, சுப்ரீம்சாட் செயற்கைக்கோளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வெளிப்படுத்தினார்.
விசாரணைகள்
இருப்பினும், பிரதமரின் கூற்றை மறுத்த அமைச்சர் வசந்த சமரசிங்க, முதலீட்டு வாரியம்(BOI) தவறான தகவல்களை வழங்கியதாகவும் உண்மையில் குறித்த செயற்கைக்கோளை காணவில்லை எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தங்களது செயற்கைக்கோள் 87.5° கிழக்கு சுற்றுப்பாதையில் உள்ளது என்பதை சுப்ரீம்சட் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், ராஜபக்சக்கள் தங்களுக்கு நன்மை இல்லாமல் நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவை முடிவுக்கு வந்தவுடன் என்ன நடந்தது என்பதை நாம் விவாதிக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

