இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு பொது வேட்பாளர் என்ற
விடயம் ஒரு பாடமாக அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர்
பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் இன்று (04.09.2024) இடம்பெற்ற மக்கள்
சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களின் விளைவாகவும் நாங்கள் தொடர்ந்தும்
ஏமாறுவதற்கு தயார் இல்லை என்பதை காட்டுவதற்கான ஒரு களமாகவும் இத்தேர்தலை மக்கள்
பயன்படுத்த வேண்டிய ஒரு நிலைப்பாடு மக்கள் மத்தியில் இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கட்சிகள்
இதன் காரணமாக இத்தேர்தலில் என்னை களம் இறக்கியுள்ளனர். இணைந்த வடக்கு கிழக்கில்
உள்ள மக்கள் அதி கூடிய வாக்குகளை எனக்கு அளிக்க வேண்டும்.
நாங்கள் போராடிய ஒரு இனம். தொடர்ச்சியாக சுதந்திரம் அற்று இருக்கின்றோம் என்ற
விடயத்தில் இருந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.
ஒரு அடையாளத்திற்காகவே நான் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றேன். நீங்கள்
சங்கு சின்னத்துக்கு வழங்கும் வாக்கு உங்களுக்கானது. தமிழன் தமிழனாக இருக்க
வேண்டும்.
தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.
சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ்
கொண்டு வரும் ஒரு நோக்காக இதனை அனைவரும் பார்க்க வேண்டும்.
தனிப்பட்ட உரிமை
யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார். யாராகவும் இருக்கலாம். இந்த நாட்டின்
9ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும்.
எங்களை
தலைவர்கள் ஏமாற்ற இருந்தாலும் மக்களாகிய நாங்கள் தயார் இல்லை என்பதை காட்ட
வேண்டும்.
எங்களுடன் 7 தமிழ் கட்சிகள் இணைந்துள்ளன.
எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சி அதில்
இணையவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் தமிழ் பொது
வேட்பாளரை ஆதரிக்க கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளார்கள். அது அவர்களின்
உரிமை” என தெரிவித்துள்ளார்.