புதிய அரசமைப்பு தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நிலைப்பாடு குறித்து கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த கலந்துரையாடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் (Gajendrakumar Ponnambalam) இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நாங்கள் பரிசீலிப்போம் என சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna)- கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
அரசமைப்பு வரைபு கலந்துரையாடல் மற்றும் கட்சிகளோடு பேசுவதற்கு ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டாலும் கூட கஜேந்திரகுமார் அழைத்த கூட்டத்தில் பங்குபற்றுவது தொடர்பில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
ஆனபடியால் அதில் எமது கட்சியினர் கலந்து கொள்வார்களா என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு முடிவு இல்லாதபடியால் அநேகமாகக் கலந்துக்கொள்வதற்கு சாத்தியங்கள் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.
ஆனாலும், ஒரு சிலர் சென்று கலந்துகொள்கின்றார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. உண்மையில் பங்கேற்பதா? இல்லையா? என்று எந்த முடிவும் கட்சியினால் எடுக்கப்படவில்லை.
சிறீதரனுடன் கலந்துரையாடல்
கஜேந்திரகுமாரின் அழைப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை. ஆனால், காலப்போக்கில் பரிசீலிக்கலாம் என்ற முடிவோடுதான் இருந்தோம். ஆனால், 25 ஆம் திகதி கூட்டம் தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நான் இருந்தாலும் கூட்டம் தொடர்பில் அறிவிப்போ, அழைப்போ எனக்குக் கிடக்கவில்லை. இதேபோன்று எமது கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அழைப்பு கிடைத்ததோ என்று எனக்குத் தெரியவில்லை.
சிறீதரன் எம்.பியிடம் (Shritharan) தான் குறித்த விடயம் கதைக்கப்பட்டது. அவரும் எம்முடன் இது பற்றி பேசியிருந்தார். ஆனாலும், கட்சிக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் பரிசீலிக்கலாம்.
அதற்காகத்தான் குழு ஒன்றும் நியமிக்கபட்டுள்ளது. அப்படி அழைப்பு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம்.” என தெரிவித்தார்.