முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய பரிமாணத்தை தொட்ட தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல்

தமிழரசுக் கட்சியின்(Itak) உட்சண்டை தற்போது இன்னோர் பரிமாணத்தைப் பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட பயணத்தடை தொடர்பாக
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இரட்டை ஊடகப்
பேச்சாளரில் ஒருவருமான சுமந்திரனை விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தினை
கேட்டிருக்கின்றார்.

இவரது இந்த உரையுடன் இதுவரை காலமும் நீதிமன்றத்தினை
நோக்கி நகர்ந்த கட்சியின் உட்சண்டை தற்போது நாடாளுமன்றத்தினை நோக்கியும் நகரத்
தொடங்கியுள்ளது.

நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் உட்சண்டையைக் கொண்டு சென்றவர்கள்
இன்னமும் தங்கள் சொந்த மக்களிடம் அதனை கொண்டு சென்று நியாயம் கேட்கவில்லை. இது
துயரம் தான்.

சிறீதரன் குற்றச்சாட்டுதலுக்கான ஆதாரங்களையும் நாடாளுமன்ற சபா
பீடத்தில் சமர்ப்பித்திருக்கின்றார். நாடாளுமன்றம் இது தொடர்பான விசாரணையை
முன்னெடுப்பதாகக் கூறியுள்ளது. சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற சிறப்புக்
குழுவிற்கு அழைக்கப்படலாம்.

 சுமந்திரன் அணி

இறுதியாக திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில்
உட்சண்டை காரசாரமாக வெளிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சியின்
நாடாளுமன்றக் குழு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கச் செல்லும்போது
சுமந்திரனையும் பதில்தலைவர் சிவஞானத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை சிறீதரன் நிராகரித்து இருக்கின்றார் சிவஞானத்தை தலைவர் என்ற வகையில் அழைத்துச் செல்லலாம் சுமந்திரனை அழைத்துச்
செல்ல முடியாது எனக் கூறியிருக்கின்றார்.

புதிய பரிமாணத்தை தொட்ட தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் | Tamil Party Leadership Crisis Escalates

இதற்கான பழிவாங்கலாகவும் சுமந்திரன்
பயணத்தடையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருக்கலாம்.
சிறீதரன் தமிழக மாநாட்டில் கலந்து கொள்வதை சுமந்திரன் அணி
விரும்பியிருக்கவில்லை.

சிறீதரனின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதே
இதற்குக் காரணம் இதனை ஈடு செய்வதற்காகத்தான் சுமந்திரனும் சாணக்கியனும் அழையா
விருந்தாளிகளாக மாநாட்டிற்கு சென்றிருக்கின்றனர்.

மாநாட்டு மேடையில்
சிறிதரனுக்கு இடம் வழங்கப்பட்டதே தவிர சுமந்திரனுக்கோ, சாணக்கியனுக்கோ இடம்
வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் பார்வையாளர் பகுதியிலேயே அமர்ந்திருந்தனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் பார்வையாளர்களிடம் வந்த போதே அவருடன் செல்பி
எடுத்துள்ளனர்.

இவர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் என அறிந்தவுடன் “புதிய
அரசாங்கம் எப்படி செல்கின்றது.

” என முதலமைச்சர் கேட்டிருக்கின்றார். அதற்கு
சுமந்திரன் “அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்” என பதில் அளித்திருக்கின்றார.;
அதற்கு முதலமைச்சர் “தானும் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன் ” என பதில்
அளித்துவிட்டு அப்பால் சென்று விட்டார். இவ்வளவும் தான் நடந்தது. இதனை பாரிய
சந்திப்பு நடந்ததாக ஊடகங்கள் பெருப்பித்து காட்ட முயற்சித்துள்ளன.

தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழியை சுமந்திரனும்
சாணக்கியனும் சந்தித்தது உண்மைதான். அதில் “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஈழத்தமிழர்களுக்காக ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என
சுமந்திரன் கேட்டிருக்கின்றார்.”

“ஏனைய மாநில எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் இவ் ஒருங்கிணைப்பில் இணைக்க வேண்டும்” என்றும்
கேட்டிருக்கின்றார். இது நல்ல விடயம் தான். ஆனால் தாயகத்தில் தாங்கள்
ஒருங்கிணையாமல் தங்களுக்காக மற்றவர்களை ஒருங்கிணைந்து செயல்படும் படி
கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

 ஈழத் தமிழர்கள்

கனிமொழியை சந்திக்கச் சென்ற போது சிறீதரன் தமிழகத்தில் நின்ற போதும் அவரையும்
அழைத்துச் செல்வதற்கு சுமந்திரனோ, சாணக்கியனோ முன் வரவில்லை
செல்வம்அடைக்கலநாதனையும் இந்த விடயத்தில் காய் வெட்டியிருக்கின்றார்கள்.

இதைவிட தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை தாயகம் அழைத்துச்
செல்வது தொடர்பாக அதனுடன் தொடர்புபட்ட உயர் அதிகாரிகளுடன் பேசியதாக சாணக்கியன்
தெரிவித்திருக்கின்றார். அகதிகள் பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினை.

இதனை
அரசியல் தலைவர்களுடன் பேசாமல் அதிகாரிகளுடன் பேசி என்ன பயன் என்ற கேள்வியும்
இங்கு எழுகின்றது. ஈழ அகதிகள் தொடர்பாக தாயகத்தில் அவர்களை வாழ்வாதாரத்துடன்
குடியமர்த்துவதற்கான ஒழுங்குகளை செய்துவிட்டு தமிழக, இந்திய தலைவர்களை
அணுகுவது தான் இங்கு பொருத்தமானதாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இவர்களின் அணுகுமுறைகள் நல்ல நோக்கத்திற்காக அமைந்ததாகத்
தெரியவில்லை.

புதிய பரிமாணத்தை தொட்ட தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் | Tamil Party Leadership Crisis Escalates

‘அந்த நல்ல நோக்கம் இருந்திருக்குமானால் முதலில் வீட்டு வேலையை
இவர்கள் ஒழுங்காக செய்திருப்பார்கள். இவர்களின் தமிழகப் பயணம் உட்கட்சி
சண்டையை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்றதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை.
சிறீதரனைப் பொறுத்தவரை அவரது பலம் என்பது தாயகத்தில் அவரது வாக்குப்பலமும்,
தமிழ்த் தேசிய சக்திகளின் ஆதரவும், புலம்பெயர் தரப்பின் ஆதரவும் தான். இதில்
புலம்பெயர் தரப்பின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

தாயகத்தில் மோசமான நிலை
இருந்த போதும் தமிழ்த் தேசிய அரசியலை தக்க வைப்பதில் புலம்பெயர் தரப்பின்
பங்களிப்பு அளப்பரியது. புலம்பெயர் தரப்பின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே
விமான நிலையச் சம்பவம் நடந்திருக்கின்றது.
இதைவிட ஒரு பழிவாங்கும் பிடிவாதக் குணமும் சுமந்திரனிடம் உண்டு. தலைமைப்
பதவியிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தன்னை தோற்கடித்தமைக்காக சிறீதரனை
பழிவாங்க முற்படுகின்றார்.

இந்தப் பிடிவாதக் குணம் முன்னர் சம்பந்தனாலும்
சுட்டிக்காட்டப்பட்டது. சம்பந்தன் ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் “சுமந்திரன் ஒரு
சுறு சுறுப்பான அரசியல்வாதி தான் ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்லர்” எனக்
கூறியிருக்கின்றார்.

கஜேந்திரகுமாரின் தற்போதைய ஒருங்கிணைப்பு முயற்சியும் பெரிய வெற்றியைத்
தரும் என கூற முடியாது. அரசியல் தீர்வு தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய
குழு 7 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருக்கின்றது.

அக்குழுவில்
சிறீதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமந்திரனின் விசுவாசிகளே! கஜேந்திரகுமார் –
சிறீதரன் இணைந்த நகர்வை தடுப்பதற்காகவே இக்குழு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இது விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டத்தையும் தமிழரசுக் கட்சி
நிராகரித்திருக்கின்றது.

இந்த ஒருங்கிணைவு முயற்சிகள் சிறீதரனை பலப்படுத்தும்
என சுமந்திரன் கருதியிருக்கலாம.;
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெற இருக்கின்றது. செல்வம் அடைக்கல நாதன்
இதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்பார் எனக் கூறுவது கடினம். அவர் சுமந்திரனுடன்
அதிகளவில் நெருங்கியிருக்கின்றார்.

 தமிழரசுக் கட்சி

செல்வம் அடைக்கல நாதனை முன்னணியுடன்
ஒருங்கிணைவுக்கு செல்ல வேண்டாம் என சுமந்திரன் கேட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
செல்வம் அடைக்கலநாதன் முதலில் தமிழரசுக் கட்சியுடன் ஒருங்கிணைவதற்குத் தான்
வாய்ப்பைத் தேடுவார்.

அது சரிவராவிட்டால்தான் மாற்று வழிகளைத் தேடுவார்.
சந்தர்ப்பம் கிடைத்தால் தனது கூட்டமைப்பை உடைத்து தனித்து தனது கட்சியை
மட்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ப்பதற்கும் அவர் தயாராக இருப்பார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தப்பலம் பெரிதாக இல்லை.

அதனுடன்
இணைந்திருக்கின்ற கட்சிகளுக்கு அமைப்புப்பலம் கிடையாது. அதைக்
கட்டியெழுப்புவதற்கான உளரீதியான ஓர்மமும் அவர்களிடம் இல்லை. அது எப்போதும்
வேறு எவற்றிலாவது தொங்கிக் கொண்டிருக்கவே முயற்சிக்கும்
மறுபக்கத்தில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பது
உறுதியாகிவிட்டது.

முன்னரும் கூறியது போல தமிழ்த் தேசியக் கட்சிகள்
ஒருங்கிணைந்து போட்டியிடாவிட்டால் தேசியமக்கள் சக்தி இலகுவாக பல சபைகளை
கைப்பற்றும். தற்போது தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசிய கட்சிகளை விட தேசிய
மக்கள் சக்தி பறவாயில்லை என்ற கருத்து வளரத் தொடங்கியுள்ளது.

புதிய பரிமாணத்தை தொட்ட தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் | Tamil Party Leadership Crisis Escalates

தேசிய மக்கள்
சக்தியின் தலைமை கடற்தொழில் அமைச்சர் சந்திர சேகரை சற்று சுதந்திரமாகச்
செயல்பட அனுமதி அளித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியலுக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில் செயல்படுமாறு அறிவுறுத்தியிருக்கின்றது.
இது விடயத்தில் சந்திரசேகர் மூன்று வியூகங்களை வகுத்து செயல்படுகின்றார்.
அதில் முதலாவது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில் முடிந்தவரை தமிழ்
மக்களுக்கு சார்பாக இருப்பதாகும்.

இன்று தமிழ்த் தேசிய கட்சிகளை விடவே தமிழ்
மக்களின் விவகாரங்களில் அவர் அக்கறையைக் குவித்து வருகின்றார். தமிழ்நாட்டு
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பாக தமிழ்நாட்டிலேயே தனது எதிர்ப்பு குரலை
பதிவிட்டு இருக்கின்றார்.

“தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் ஈழக் கடல் வளங்களை நாசம்
செய்கின்றனர்”; என அவர் கூறியிருக்கின்றார். அவருக்கு இது விடயத்தில்
தமிழ்நாடு, இந்திய மத்திய அரசு தொடர்பான மனத் தடைகள் இதுவும் இல்லை.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் விவகாரத்தை
தமிழ் மக்களின் அகமுரண்பாடாகவே பார்க்கின்றனர.; தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த்
தேசிய அரசியலின் முக்கிய சேமிப்பு சக்தியாக உள்ளனர்.

அவர்களுடனான முரண்பாடு
நேச முரண்பாடே ஒழிய பகை முரண்பாடல்ல என்பது அவர்களினது கருத்து நிலையாகும்.
இதனால் இறுக்கமான வார்த்தைப் பிரயோகங்கள் எவற்றையும் வெளிப்படுத்த அவர்களால்
முடியவில்லை.

சந்திர சேகருக்கு அந்தத் தடைகள் எதுவும் கிடையாது. அவரைப்
பொறுத்தவரை தமிழ்நாட்டு கடற்றொழிலாளர் தொடர்பான முரண்பாடு புற முரண்பாடு தான்.
இதே போல இந்திய மத்திய அரசினைக் கண்டிக்கும் விவகாரத்திலும் தமிழ்த் தேசியக்
கட்சிகள் அமர்த்தியே வாசிக்கின்றன. கடற்றொழிலாளர் விவகாரத்தில் கடும் அழுத்தங்களை
மத்திய அரசிற்கு கொடுக்காமைக்கு இதுவே காரணமாகும். தமிழரசுக் கட்சியின் பதில்
தலைவர் சிவஞ்ஞானம் யாழ் கலாச்சார மண்டப பெயர் மாற்றம் தொடர்பாக ஒரு வேண்டுகோளை
தான் இந்திய துணைத் தூதரூடாக இந்திய மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் சந்திரசேகர் பெயர் மாற்றத்திற்கு அதிர்ப்;தி தெரிவித்ததுடன் தமிழ்
மொழிக்கு மூன்றாவது அந்தஸ்து கொடுத்ததையிட்டு பலத்த கண்டனத்தையும்
தெரிவித்திருக்கின்றார். இது விடயத்தில் ஜே.வி.பி.யிடம் மரபு ரீதியாக
இருக்கும் இந்திய எதிர்ப்பும் அவரை ஊக்கு வித்திருக்கலாம.;
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்
சந்திரசேகரையும் இந்தியத் தூதுவர் மூடிய அறைக்குள் சந்தித்து
பேசியிருக்கின்றார்.

இந்தச் சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரத்தை சற்று அமத்தி
வாசிக்கும்படி தூதுவர் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இவ்அழுத்தம் தொடர்பான
திருப்தியின்மையினால் தான் ஏனையவர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர்
சந்திரசேகர் களத்தில் நிற்கவில்லை.

13வது திருத்த விவகாரம்

தமிழ் மக்களிடம் இந்தியா தொடர்பான அதிருப்தி நிறையவே இருக்கின்றது. தமிழக
கடற்றொழிலாளர் விவகாரத்திலும், அரசியல் தீர்வு விவகாரத்திலும் இந்த அதிருப்தி உள்ளது.
சந்திரசேகரின் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு சற்று தெம்பூட்டுபவையாக உள்ளன.

13வது திருத்த விவகாரத்திலும் “அது தமிழ் மக்களின் உரிமை அதில் நாம் கை வைக்க
மாட்டோம் என தமிழ்நாட்டில் வைத்தே சந்திரசேகர் கூறியிருக்கின்றார். இது
தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் மனோகணேசனிடம் 13ஆவது திருத்தம்
தமிழ் மக்கள் போராடிப் பெற்றது. அதில் நாங்கள் கை வைக்க மாட்டோம் என கூறியதாக
தகவல் உள்ளது.
சந்திரசேகர் இன்று முக்கிய அரசியல் பிரமுகராக இருக்கின்றார்.

தமிழ்
அரசியலிலும் அவர் அக்கறை காட்டுவதாலேயே இந்த பிரமுகர்முகம் அவருக்கு
கிடைத்துள்ளது. முக்கிய இராஜதந்திரிகள் அவரை சந்திப்பதிலும் அக்கறை
செலுத்துகின்றனர்.

அண்மையில் அமெரிக்க தூதுவரும் அவரைச்
சந்தித்திருக்கின்றார் தேசிய மக்கள் சக்திபிரமுகர்களில் ஜனாதிபதி, பிரதமர்,
வெளிநாட்டமைச்சர் என்போருக்கு அடுத்ததாக சந்திரசேகர் உள்ளார் எனக் கூறலாம்.
சந்திரசேகரின் இரண்டாவது வியூகம் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளில்
தலையிட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடிப்பதாகும் இதன்
அடிப்படையில் தான் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர் அத்துமீறல் பிரச்சினையையும்
சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பிரச்சினையையும் அவர் கையில் எடுத்திருக்கின்றார்.

சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பிரச்சினை ஒரு சூழலியல் பிரச்சினையாக இருப்பதால்
தென்மராட்சி மக்களின் ஆதரவை நன்கு பெற்றிருக்கின்றது. அங்கு தமிழ்த் தேசிய
கட்சிகள் பலத்த அதிர்ப்தியைப் பெற்றுள்ளன.
மூன்றாவது வியூகம் அங்கையன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன்
ஆகியோரின் ஆதரவுத் தளங்களைக் கைப்பற்றிக் கொண்டு தேசிய ஆதரவுத் தளங்களை நோக்கி
முன்னோறுவதாகும்.

கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் என்போரை அணி திரட்டிக் கொண்டு
நடுத்தர வர்க்கத்தை நோக்கி செல்லும் நகர்வு காணப்படுகின்றது. அங்கையன்
இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் போன்றோருக்கு இனி வரும்
காலங்களில் வாய்ப்புக்கள் கிடைப்பது கடினம்.

அடித்தள மக்கள் மத்தியில்
பணியாற்றுவது என்பது ஒரு கலை. அது தேசிய மக்கள் சக்தியிடம் நிறையவே
இருக்கின்றது.

பெருந்தேசியவாதத்திற்கு எப்போதும் மூன்று முகங்கள் உண்டு. இனவாதமுகம் லிபரல் முகம், இடது சாரி முகம் என்பவையே இவ் மூன்றுமாகும்.

புதிய பரிமாணத்தை தொட்ட தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் | Tamil Party Leadership Crisis Escalates

இதில் இனவாத
முகத்தை மகிந்தர், விமல் வீரவன்ச, உதயகம்மன்பல போன்றவர்களும் லிபரல் முகத்தை
ரணில், சஜித் போன்றவர்களும் இடது சாரி முகத்தை ஜே,பி.பி யினர் உட்பட மரபு
ரீதியான இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பிரதிபலிக்கின்றனர். இவர்களில்
லிபரல் முகத்தவர்களுக்கும் இடதுசாரி முகத்தவர்களுக்கும் பெருந்தேசிய வாத
சக்திகளுக்குமிடையே வரலாறு முழுவதும் மோதல் இடம்பெற்று வந்துள்ளது.

ஜே.வி.பி
க்குள்ளும் இந்த மோதல் இடம் பெற்றிருக்கின்றது. லயனல் போபகே முன்னர்
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கட்சியில் இருந்து
வெளியேறுவதற்கும், நந்தன குணதிலக போன்றவர்கள் வெளியேறுவதற்கும் தேசிய
இனபிரச்சினை தொடர்பான நிலைப்பாடே பிரதான காரணமாக இருந்தது.

ஆனால் வரலாறு
முழுவதும் பெருந்தேசியவாத முகமே வெற்றி பெற்றிருக்கின்றது.
சந்திரசேகரின் நகர்வுகள் எவ்வாறு இருந்தாலும் பெருந் தேசிய வாதம் சிங்கள
அரசியலில் மேலாதிக்கம் செலுத்தும் வரை தேசிய மக்கள் சக்தியால் அதிலிருந்து
விடுபட முடியாது. இதனால் சந்திரசேகரின் செயற்பாட்டிற்கும் ஒரு எல்லை உண்டு.

இதனால் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பி நீண்ட தூரம் பயணிக்க
முடியாது. தமிழ்த் தேசியத் தரப்பை ஒருங்கிணைப்பது தான் தமிழ்த் தேசிய
அபிலாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே வழி
தமிழ்த் தேசிய சக்திகள் இதுபற்றி ஆழமாக சிந்திப்பார்களா?

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.