2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியத்தினதும்
தமிழ் மக்களதும் நன்மை கருதி அனைத்துச் சுயேட்சைக் குழுக்களும் அரசியல்
கட்சிகளும் ஐக்கியப்பட்டு ஒரு குடையின்கீழ் நின்று தேர்தலை எதிர்கொள்ளத்
தயாராவோம் வாரீர் என 17 சுயேச்சைக்குழுக்களின் இணையமான ஐக்கிய தமிழர் ஒன்றிய
கட்சி பகிரங்க அழைப்பு விடுக்கிறது.
இக்கட்சியின் தலைவர் ஶ்ரீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இன்றைய அரசியல் கள நிலவரப்படி தமிழர்கள் ஐக்கியப்பட்டு நிற்பதையே இலங்கை வாழ்
தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் மிக ஆவலோடும் அக்கறையோடும்
எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
நீண்ட கால எதிர்பார்க்கை
தமிழ் மக்களின் இந்த நீண்ட கால எதிர்பார்க்கை இன்று காலத்தின் கட்டாயமாக
இருப்பதை அனைத்து கட்சிகளும் உணர்வோம். இந்த எதிர்பார்க்கையை நிறைவேற்றுவது
ஒவ்வொரு சுயேச்சை குழுக்களதும் அரசியல் கட்சிகளதும் தலையாய நோக்காக கடமையாக
இருப்பதையும்
உணர்வோம்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது போல எங்களுக்குள் இருக்கும் சுயநலம் சார்
அகப்புற முரண்பாடுகளை களைந்து பொதுநல நோக்கோடும் தூர நோக்கோடும் சிந்தித்து
காலையில் உதிக்கும் புதிய சூரியன் போல் ஐக்கியப்பட்டு எழுந்து நிற்போம் வாரீர்.
இவ்வாறு ஐக்கியப்பட்டு ஒவ்வொரு தேர்தலிலும் நாம் நிற்போமானால் தென்பகுதி
கட்சிகள் எம்மண்ணில் கால் ஊன்றுவதைத் தடுக்கலாம். தமிழ் வேட்பாளர்களும்
வாக்காளர்களும் தமிழ்த் தேசிய உணர்வு இன்றி விலை போவதைத் தடுக்கலாம்.
நம்
விரலை வைத்து நம் கண்ணை குத்தி குருடாக்கும் அந்நியத்தை தடுக்கலாம்.
அவசிய தடுப்பு
தமிழ்த்
தேசியம் வலுவிழக்காமல் சிதையாமல் இருப்பதற்கு இந்த தடுப்பு மிக அவசியம் என்பதை
உணர்வோம்.
இந்த ஐக்கியப்பட்டு நிற்கும் அரிய சாதனைக்காக தமிழ் தேசியம் சார் கொள்கைக்காக
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்காக அவர்களின் விடிவிற்காக ஐக்கிய தமிழர்
ஒன்றியம் என்ற எமது கட்சி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு தயாராகவே
உள்ளது.
இதற்காக எமது கட்சி வீரமும் விவேகமும் அரசியல் அனுபவமும் நிறைந்த குழு
ஒன்றை அமைத்துள்ளது.
தமிழ்த் தேசிய கட்சிகள் அழைப்பு விடும்பட்சத்தில் ஓடோடி வரக்
காத்திருக்கின்றோம்.
ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறுவதன்
மூலம் தமிழர் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கலாம். இழந்த உரிமைகளை மீட்பதற்கு
ஒன்றுபட்டு குரல் கொடுக்கலாம். இதற்கு பாரத தேசம் துணை நிற்கும் என நம்பலாம்.
காலம் கனியும். தமிழர் கனவு நனவாகும்.