ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் – ஆவணத்தில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், அரசியல் விடயங்களைக்
கையாள்வதற்கு மத்திய செயல் குழுவினாலே நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில்
நேற்று பகல் ஓர் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இதன் நிறைவில்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கையொப்பம் இடவில்லை
மேலும் தெரிவிக்கையில், இன்னொரு தரப்புத் தயாரித்து எமது மேசையில் வைத்த ஆவணத்தில் நாம் கையொப்பம்
இடவில்லை. நாம் அதைவிட தீர்க்கமாகப் பல விடயங்களை ஆராய்ந்து – சொல்ல வேண்டிய
முறையில் – சொல்ல வேண்டிய தருணத்தில் – தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம்
செய்யும் பிரதான கட்சி என்ற வகையில் அதை வெளிப்படுத்துவோம்.” என்றார் அவர்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசியல் தீர்வு தொடர்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடினோம்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு ஒன்று முன்
வைப்போம் என்ற வாக்குறுதியுடன் வந்திருக்கின்றார்கள். ஆனால் தற்போது வரை அது
குறித்துப் பேச்சு ஏதும் அரசுப் பக்கத்தில் இருந்து கிடையாது.
சென்ற வாரம்
பிரதமர் ஏதோ கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பிலும் எமது கவனத்தைச்
செலுத்துவோம். ஏனெனில் ஜே.வி.பியினர் கடந்த காலங்களில் இந்த விடயத்திற்காக
எம்மோடு இணைந்து செயல்பட்டனர். மாற்றுச் சட்டங்களை முன்னைய அரசாங்கங்கள்
கொண்டு வந்தபோது மாற்று எதுவுமே தேவையில்லை என அவர்கள் வாதிட்டனர்.
புதிய அரசமைப்பு
ஆனால்
தற்போது மாற்றுச் சட்டம் குறித்துப் பேசுகின்றனர். எனவே நாம் இதை கடுமையாக
எதிர்க்கின்றோம்.
புதிய அரசமைப்புத் தொடர்பில் அரசு உடனடியாக தனது தீர்வை முன் வைக்க வேண்டும்.
அதுவரை மாகாணசபைகள் இருக்கின்றபடியே இயங்குவதற்கு நாங்கள் ஏது செய்வோம் என
எமது அலுவலக வாசலில் வைத்து ஜனாதிபதியாக முன்னர் அநுரகுமார திஸாநாயக்க
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
அதனை துரிதமாக – காலத்தை
இழுத்தடிக்காது செய்ய வேண்டும். மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட
திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்.
எதிர் வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள
இலங்கை பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் சம்பந்தமான தீர்மானத்தின் காலம்
நிறைவடைகின்றது.
அதனால் அது நீடிக்கப்பட வேண்டும். இதைக் கூறினால் அரசிற்கு
கால அவகாசம் நாம் பெற்றுக் கொடுப்பதாகக் கூறுவார்கள். அது அப்படி அல்ல.
சர்வதேச மேற்பார்வையைத் தொடர்ந்து தக்க வைப்பதாக இருந்தால் இன்னுமொரு
தீர்மானம் திறைவேற்றினால் மட்டுமே மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அந்த
மேற்பாவையை மேற்கொள்ளலாம்.
அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதாகப்
பிரித்தானியா வாக்குறுதியளித்துள்ளது. இதில் புதிதாக வந்துள்ள விடயம் செம்மணி
விவகாரம். அண்மையில் ஆணையாளரே நேரடியாகப் பார்த்துச் சென்றுள்ளார்.
ஐ.நா. தீர்மானம்
செம்மணியில் இனப்படுகொலைக்கான ஆதாரம் வெளிவருகின்றது என நாம் ஜனாதிபதிக்கு
கடிதமும் எழுதியுள்ளோம். இதன் பிரதி ஐ.நா. ஆணையாளருக்கும் உறுப்பு
நாடுகளிற்கும் வழங்கியுள்ளோம்.
ஐ.நா. தீர்மானம் வருகின்ற போது உறுப்பு நாடுகளுக்குக் கடிதம் எழுத வேண்டும்
எனத் தமிழ்த் தேசிய மக்க முன்னணியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.
அதில் சில சிவில் அமைப்புக்களும் இணைந்திருந்தார்கள். நாம் அதில்
பங்குகொள்ளவில்லை. அதற்கான காரணத்தை எமது கட்சியின் தலைவர் ஊடகங்களிற்கு
கூறியுள்ளார்.
அவர்களின் கூட்டத்தில் அவர்கள் ஒரு கடிதத்தைத் தயாரித்துள்ளனர். தயாரித்த
கடிதத்தை தலைவருக்கும் எனக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
அது தொடர்பில் கூடி ஒரு
தீர்மானம் எடுப்போம் எனக் கூறியதன் பின்பும், எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பி அவர்களின் கையொப்பத்தையும் கேட்டுள்ளனர்.
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே நாம் கட்சித் தீர்மானமாகவே
செயற்படுவோம், தனியாகக் கையொப்பம் வைக்க மாட்டோம் என அவர்களுக்கு
அறிவித்துள்ளனர். இது தொடர்பிலும் (இன்று) பேசினோம்.
சம்பந்தனின் கையெழுத்துடனான ஆவணம்
எமது நிலைப்பாடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் என்ன செய்யப்பட வேண்டும்,
தமிழ் மக்கள் சார்பாக எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் எமது
தீர்மானத்தை சொல்லியிருக்கின்றோம். உயர்ஸ்தானிகர் வந்தபோதுகூட 2021 இல் நானும்
கஜேந்திரகுமாரும் இறுதி செய்த ஓர் ஆவணம் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர்
கையொப்பமிட்டு கையளித்தோம்.
அது எமது நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை.
இந்தத் தருணத்தில் எதைச் சொல்ல வேண்டும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என நாம்
ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கின்றோம். அவர்கள் தயாரித்து எமது
மேசையில் வைத்த ஆவணத்தில் நாம் கையொப்பம் இடவில்லை.
நாம் அதைவிட தீர்க்கமாகப்
பல விடயங்களை ஆராய்ந்து சொல்ல வேண்டிய முறையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம்
செய்யும் பிரதான கட்சி என்ற வகையில் உகந்த தருணத்தில் அதை வெளிப்படுத்துவோம்.
அத்தகைய தீர்மானம் ஒன்றை இன்று எடுத்துள்ளோம்.” – என்றார்.