பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாவெல் துரோவை, பிரான்சில் (france) உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து கடந்த (24.8.2024) மாலை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
டெலிகிராம் செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் பாவெல் துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பாவெல் துரோவ்
அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து பாவெல் துரோவுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் 5 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை செலுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.
மேலும் அவர் நீதிமன்றின் கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்சை (France) விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் வாரத்திற்கு 2 முறை காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.