இந்தியில் ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள “தாமா” திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.
கதைக்களம்
டிவி சேனலில் வேலை பார்க்கும் அலோக் கோயல் (ஆயுஷ்மான் குரானா) காட்டில் தாடகாவை (ராஷ்மிகா மந்தனா) சந்திக்கிறார்.
அப்போது அங்கு வரும் கும்பல் அலோக்கை கடத்தி கொண்டு செல்கிறது.
அந்த கும்பல் பேதால் என்ற மனித இனமாக அல்லாதவர்கள் (இரத்த காட்டேரி அல்லது வேம்பையர்) ஆவர்.
அவர்கள் குகைக்குள் மாய சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் யாக்ஷாசனுக்கு (நவாஸுதீன் சித்திக்) உணவாகவே அலோக்கை கொண்டு செல்கிறார்கள்.
அந்த யாக்ஷாசன் வசீகரமாக பேசி அலோக்கின் இரத்தத்தை குடிக்க முற்பட, அங்கு வரும் தாடகா அவரை காப்பாற்ற இருவரும் காட்டை விட்டு வெளியேறி டெல்லி செல்கின்றனர்.
அலோக் தனது பெற்றோரிடம் தாடகாவை தாரிகா என்று கூறி, இவள்தான் என் உயிரை காப்பாற்றினாள்; இனி நம்முடன்தான் இங்கேயே இருக்கப் போகிறாள் என்று கூறி தாடகாவை தங்க வைக்கிறார்.
அதன் பின்னர் தாடகா மனிதர் அல்ல பேதால் என்று அலோக்கிற்கு தெரிய வருகிறது. மேலும், அலோக்கிடம் தங்கள் பின்னணி குறித்து தாடகா விளக்குகிறார்.
அதே சமயம் பல ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் யாக்ஷசன் வெளியே வருவதற்கான தருணத்தை நோக்கி காத்திருக்க, பேதால் இனத்தைச் சேர்ந்த சிலர் அலோக்கையும், தாடகாவையும் தேடி வருகின்றனர்.
தாடகாவினால் அலோக்கிற்கு என்ன ஆகிறது? யாக்ஷசன் விடுதலை பெற்றாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மேட்டாக் ஹாரர் காமெடி யுனிவர்சில் 5வது படமாக இந்த தாமாவை இயக்கியுள்ளார் ஆதித்யா சர்போத்தர். இவர் முஞ்சியா படத்தை இயக்கியவர் ஆவார்.
பேதால்களுக்கான முன் கதையுடன் தொடங்கும் படம் எங்கும் தொய்வில்லாமல் நகர்கிறது.
ஆயுஷ்மானுக்கு ராஷ்மிகாவினால் என்ன ஆகும், அவர் எப்படி பேதால்களிடம் இருந்து தப்பிப்பார் என்று பரபரப்புடனே முதல் பாதி திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.
அதே சமயம் படத்தின் கதையுடனே வரும் காமெடிக்கும் பஞ்சமில்லை.
பாய்ஸன் பேபி பாடலில் மலைக்காவின் ஆட்டம் அருமை.
அபிஷேக் பானர்ஜி இந்த யுனிவர்ஸை கனெக்ட் செய்யும் நபராக கேமியோ செய்துள்ளார். முஞ்சியாவில் தோன்றிய எல்விஸ் கதாபாத்திரமாக நடிகர் சத்யராஜ் முக்கிய காட்சியில் வருகிறார்.
அவர் பேடியாவுக்கு கொடுக்கும் தீர்வு திரைக்கதையில் செம ட்விஸ்ட்டாக மாறுகிறது.
இரண்டாம் பாதியைப் பொறுத்தவரை இது போல் பல ட்விஸ்ட்கள் வந்து ஆச்சரியப்படுத்துகின்றன.
குறிப்பாக கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட் மற்றும் போஸ்ட் கிரெடிட் காட்சி சிறப்பு.
ராஷ்மிகா மந்தனா வேம்பையர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
தி பெட் டிடெக்டிவ்: திரை விமர்சனம்
ஆனால் அவரது உடைகளில் கிளாமர் அதிகமாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளிலும் கைதட்டல்களை பெறுகிறார்.
ஆயுஷ்மான் குரானா தனக்கே உரிய காமெடி கதாபாத்திரத்தை சுலபமாக கையாண்டாலும், ஒரு முக்கிய ஆக்ஷன் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.
வருண் தவானின் கேமியோ மட்டுமின்றி, அவர் அடுத்தடுத்த பாகங்களில் பெரிய விளைவை ஏற்படுத்த போகிறார் என்பதை இதில் கூறியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
பாடல்கள், பின்னணி, மேக்கிங் அனைத்தும் சிறப்பாக உள்ளன. லாஜிக் மீறல்களும் படத்தில் இருந்தாலும், திரைக்கதை அமைப்பு அதனை கவனிக்க விடவில்லை.
க்ளாப்ஸ்
திரைக்கதை
காமெடி
ட்விஸ்ட்கள்
ராஷ்மிகா மந்தனா
பல்ப்ஸ்
சில லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு லோகா’வை போல், ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்த தாமா (Thamma) அமைந்துள்ளது. இந்த வேம்பையர் பேண்டஸி உலகையும் கண்டிப்பாக ரசிக்கலாம்.