ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதிக்கு பாராட்டு
ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.