இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது அரசியல் சாணக்கியம் நிறைந்தது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகம்
இந்த நாட்டையும் சிறுபான்மை மக்களையும் சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தாம் இதனைக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயற்பாடானது சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகவும்,சஜித் பிரேமதாச இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கக்கூடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மிக விரைவில் வடகிழக்கின் ஏனைய சிறுபான்மை கட்சிகளும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முன்வருவார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.