இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய தலைமை பணிப்பாளராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டதை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த சர்ச்சைக்குரிய கொள்கலன் மோசடியில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடக சந்திப்பில் பேசியபோது, சர்ச்சைக்குரிய “சிவப்பு லேபிள்” கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கு விசாரணை நடத்திய குழுவொன்றின் அறிக்கையில் அருக்கொட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மறுபரிசீலனை செய்ய வலியுறுத்து
இதன்படி, குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ஒருவரை இத்தகைய உயர்ந்த பதவிக்கு எவ்வாறு நியமிக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அத்தோடு, அருக்கொடவுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து அரசாங்கம் உடனடியாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

