அமெரிக்கா (United States) தனது இராணுவத்தை ஐரோப்பியத் தளங்களிலிருந்து திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் (Ukraine) மீதான ரஷ்யாவின் (Russia) ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் ஐரோப்பியத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டனர்.
தனது இராணுவத்தினை தற்போது அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்த நடவடிக்கையானது ஐரோப்பிய நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நேட்டோவின் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், மறுஆயுத வங்கியின் மூலம் அரசின் நிதியைப் பயன்படுத்தி தனியார் இராணுவ முதலீட்டைப் பெருக்கவும், ஐரோப்பிய இராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், உக்ரைனுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக படைகளைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லப்பட்டாலும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வரும் நிலையில் அதற்கான ஆயத்தமாக அமெரிக்கா இராணுவப் பலத்தைப் பெருக்க முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நேட்டோவிலிருந்தும் அமெரிக்கா வெளியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.