அமெரிக்காவின் (United States) 47 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்காவின் தென் எல்லை பகுதிகளில் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நிர்வாகத்தின் கொள்கைகளை விரைவாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவுகளின் ஒரு பகுதியாகவே இவ்விடயம் பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததும் டொனால்ட் ட்ரம்ப், முதல் நாளிலேயே 100 நிர்வாக உத்தரவுகளுக்கு கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வமாக பதவி
தனது திட்டங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கவும் ட்ரம்ப் உத்தரவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையின் போதே, ஜோ பைடனின் வெளிப்படையான எல்லை கொள்கைகளை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றதும் எடுக்க திட்டமிட்டிருக்கும் டசின் கணக்கான நிர்வாக உத்தரவுகளை ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
அத்தோடு, பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இனி அமெரிக்க குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லையில் தேசிய அவசரகால அறிவிப்பின் ஒரு பகுதியாக, எல்லையை மூட பாதுகாப்புத் துறையை ட்ரப் அறிவுறுத்துவார் எனவும் அத்துடன் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக, பதவியேற்ற முதல் நாளிலேயே கனடா (Canada), மெக்சிகோ (Mexico) மற்றும் சீனாவிலிருந்து (China) அமெரிக்காவிற்குள் ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், பதவியேற்பு நாளில் புதிய வரி விதிப்பு எதுவும் அறிவிக்கப்படாது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.